ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை.
இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கும் நாதசுவர வித்வான்களில் மூத்தவராகவும், சிறந்தவராகவும் இருப்பவர், ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை. ஆச்சாள்புரம் கொள்ளிடத்தின் தென் கரையில் சிர்காழி தாலுக்காவில் உள்ள பழம் பெருமை வாய்ந்த ஊர். இவ்வூரில்தான் திருஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்தது.
இவர் 14.4.1930 ல் திரு. சுப்பராய பிள்ளைக்குப் பரம்பரை நாதசுவரக் குடும்பத்தில் பிறந்தவர். தன பெரிய தந்தையாரிடமே முதலில் இக்கலையைக் கற்றார். பின்னர் திருவீழிமிழலை சகோதரர்களிட மும், சிதம்பரம் ராதாகிருஷ்ணப்பிள்ளை யிடமும் பயின்றார்.
1951 லிருந்து திருச்சி வானொலி நிலையத்திலிருந்தும் 1957லிலிருந்து சிதம்பரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர்,சங்கரன்கோயில், பைப்பொழில் முதலிய திருக்கோயில்களிலும், கேரளா, டில்லி, நாக்பூர் போன்ற இடங்களிலும் வாசித்து வருகிறார். 1991லிலிருந்து தொலைக்காட்சியிலும் வாசித்துவருகிறார்.
சிதம்பரம் சபாநாயகர் கோயிலிலும், காஞ்சி மடத்திலும் ஆஸ்தான வித்துவானாக உள்ளார்.
1957, 59 களில் இலங்கை சென்று வாசித்திருக்கிறார்.
“ சிதம்பரம் மல்லாரி”, “ திருமுறைப்பாடல்கள் “, “ நாதனும் நாதமும்” என்ற ஒலி, ஒளி நாடாக்களை வெளியிட்டிருக்கிறார்.
தமிழிசைச் சங்கம், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி போன்ற சபாக்களில் வாசித்திருக்கிறார்.
இசைக்கல்லூரிகளில் பாடம் கற்பித்தும், தேர்வாளராக அமர்ந்தும் பணி புரிந்திருக்கிறார்.
நாதஸ்வர மணி, மல்லாரி வேந்தன், ராஜரத்னா என்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இந்து, தினமணி, சினி எக்ஸ்பிரஸ் போன்ற செய்தித் தாள்கள் இவரைப் பெரிதும் புகழ்ந்து கட்டுரைகளும், விமரிசனங்களும் வெளியிட்டிருக்கின்றன.
பிரபல இசை விமரிசகர் முனைவர். பி.எம். சுந்தரம் அவர்கள், திருக்கோயில்களில் திருவிழாக்களின்போது, நாதஸ்வரத்தில் மல்லாரி வாசிக்கும் மரபுபற்றிப பேசி, ஒரு வீடியோ குறுந்தகடு வெளியிட்டிருக்கிறார். சிவன் கோயில்களிலும் பெருமாள் கோயில்களிலும் பின்பற்றப்படும் மரபுகள் வெவ்வேறானவை. பத்து நாட்கள் விழாவிலும், பதினோராம் நாளிலும் வாசிக்கப்படும் மல்லாரிகள் வெவ்வேறானவை. தெற்குகோபுர வாயிலில் வாசிக்கப்படும் இசையும் மேலக்கோபுர வாயிலில் வாசிக்கப்படுவதும் வெவ்வேறு. காலையில் வேறு. மாலையில் வேறு. இவை அனைத்தையும் தனது அருமையான வாசிப்பில் அவர் வெளிக்கொணரும்போது, நாதத்தில் நம்மை மறந்து லயித்துவிடுகிறோம். இசைக்கு எப்படியெல்லாம் நம் முன்னோர்கள் இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் என நினைந்து மகிழ்ந்து, வியந்து போகிறோம். எண்பத்து நான்கு வயதில் இப்படி ஒரு வாசிப்பா என வியபில் ஆழ்ந்து போகிறோம்.
தஞ்சை மண்ணால் இவருக்குப் பெருமையா, அல்லது இவரால் தஞ்சைக்குப் பெருமையா. இரண்டுமே.
எண்பத்து நான்கு வயதில் இப்படி ஒரு வாசிப்பா என வியபில் ஆழ்ந்து போகிறோம். தஞ்சை மண்ணால் இவருக்குப் பெருமையா, அல்லது இவரால் தஞ்சைக்குப் பெருமையா. --இரண்டையும் காண கொடுத்து வைத்தவர்கள் அய்யா ..தாங்கள்...
ReplyDelete