Monday, August 4, 2008

சிந்தனைத்துளிகள்.

1

சந்நியாசியையும், சண்டாளனையும் ஒன்றாகவே பார்க்கும் பக்குவம் ஒருவனுக்கு வரவேண்டும்.
2

மரபணு இயல்பாகவே சுயநலத்தோடு செயற்படுவதால், அதனைப்பற்றிய பல செய்திகள் ( selfish gene ) வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. சமூக இயல் அறிஞர்கள் 'சுயநலக்கார மரபணு'வினால் தலைமுறைக்குத் தலைமுறை மனித இனத்திடையே சுய நலம் அதிகமாகி, பொருளாதார, சமூகக்கோட்பாடுகள் நிலை தடுமாறிவிடுமோ என்றஞ்சும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இது பற்றிப்பல புத்தகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி இந்த அளவுக்குக் கவலைப் படத்தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில்,

அ) சுயநலக்கார மரபணுவினால் அப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்குமானால், எத்தனையோ தலைமுறைக்கு முன்னரே தாயுக்கும், பிள்ளைக்கும் இடையே உள்ள பாசம் மறைந்து அல்லது குறைந்து போயிருக்க வேண்டும். ஆனால், அப்படியாகவில்லை.
ஆ) பிறந்த குழந்தையைப் பார்க்கும் எவரும் அது தாய் அல்லது தந்தையின் குணத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுவதில்லை. முகத்தைக் கொண்டிருக்கிறது என்று சொல்வதுண்டு. மரபணு உடலைப் பாதிப்பதைப் போல் உள்ளத்தைப் பாதிப்பதில்லை.

இ) இரணியனுக்கு எப்படி பிரகலாதன் பிறந்தான்? கம்சனுக்கு எப்படி கிருஷ்ணன் மருகனாகப் பிறந்தான்? உத்தமியாகிய காந்தாரிக்கு நூறு பாவிகள் எப்படிப் பிறந்தனர்? இங்கேயெல்லாம் மரபணு எங்கே போயிற்று?

மனித இனத்தின் இயல்பு அன்பு/தயை; அதை மரபணுவால் மாற்றமுடியாது.

3

எந்த ஒன்று முழுமையாக இல்லையோ அந்த ஒன்று முதன்மையாக இருக்க முடியாது.
4

அறிவு பல வகைகளில், துறைகளில் பரவி நிற்கிறது. ஒருவன் எத்துனைத் துறைகளில் சிறந்த அறிவு பெற்றிருப்பினும் அவன் முக்கியமாகத் தெரிந்துகொண்டிருக்க வேண்டிய செய்திகள் இரண்டு;
1. நான் யார்?
2.நான் என்ன செய்ய வேண்டும்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை;
1. இப்பிரபஞ்சம் முழுதும் பரவி நிற்கும் மகா சக்தியில் நான் ஒரு துகள்.
2.எத்துனைப் பிறவி எடுப்பினும் அத்துனைப் பிறவியிலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.
5

மனித வாழ்க்கையின் குறிக்கோள் மகிழ்ச்சி. நேற்று அனுபவித்த மகிழ்ச்சியைக்காட்டிலும் நாளைக்கு ஒரு சிறிதேனும் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்ற மனிதனின் ஆசை அல்லது பேராசையே , எடிசன், பெல்,மார்க்கோனி, ஐந்ஸ்டின், டால்ஸ்டாய், காந்தி, மண்டேலா,தொல்காப்பியர், வள்ளுவர், கல்கி, ஜெயகாந்தன், சிவாஜி கனேசன், பத்மா சுப்ரமணியம் போன்றோரின் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் காரணம். மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சிக்கெல்லாம் உந்துசக்தியாக இருந்து செயல்படுவது இந்த ஆசை/பேராசையே.
6

”விதியையும் மதியால் வென்றிடலாம் என்பது தவறு; விதியை அருளால் மாத்திரமே வெல்ல முடியும்” என்பது ஆன்மீக வாதிகளின் வாதம். ”அருளைப் பெறுவதற்கும், அதற்காக ஆண்டவனை உணர்வதர்க்குங்கூட ஓரளவேனுமாகிலும் மதி தேவையே” என்பது பகுத்தறிவாளர்களின் வாதம்.

7

இறையன்பின் வழிநடத்தல் இருக்கும்போது, கொஞ்சமும் முணுமுணுக்காமல் அதன் கையை இறுகப் பற்றிக்கொண்டு
அதனோடு நட.
இறை இட்ட ஆணையை நிறைவேற்றும்போது, முழுமையாக உன்னை அர்ப்ப ணித்துக்கொள். திறமையாகச்செய்; முழுமையாகச்செய்; சீராகச்செய்; நேராகச்செய்; உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய். பலனை எதிர் பார்க்காதே.

8

குழந்தைகள், பார்த்து, கேட்டு, சிந்தித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுகின்றன. பார்ப்பன யாவும் தாய் மண்ணிற்குச் சொந்தமானவை; கேட்பவை யாவும் தாய் மொழியில்; ஆகவே, பார்த்தனவற்றையும், கேட்டனவற்றையும் அக்குழந்தை சிந்திக்கும்பொழுது தாய் மொழியிலேயே சிந்திக்கிறது. ஒரு குழந்தை எம்மொழியில் சிந்திக்கிறதோ அம்மொழியிலேயே அதன் சிந்தனைத்திறன் வளர்கிறது. சிந்தனைத்திறன் எம்மொழியில் வளர்ந்திருக்கிறதோ அம்மொழியிலேயே கல்வி புகட்டப்படல் வேண்டும். அம்மொழி தாய் மொழியே. இதை unesco உறுதி செய்திருக்கிறது.

ஆகவே, தாய் மொழியில் கற்பிக்கப்படும்போது, செய்திகள் வேகமாக, சீராக உள்வாங்கப்படுகின்றன; கல்வி (அறிவியற்கல்வியாக இருப்பினும்) முழுமையானதாகிறது. “ வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்ற அவ்வையின் வாக்கு unescoவின் கண்டுபிடிப்புக்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது.

9

தனிமனித உரிமைகளுக்காகப் பரிந்து பேசும் சாசனங்களும் சட்டங்களும், பிச்சையெடுப்பவனைத் தண்டிக்கின்றன.
தனி மனிதனுக்காக ‘ பரந்து கெடுக உலகியற்றியான் ‘ என்று பரிந்து பேசும் வள்ளுவன் ‘ இளைதாக...கொள்க ‘ என்று வெகுண்டெழுகிறான்.
தனி மனிதனுக்காக 'ஜெகத்தினையழித்திடுவோம்' எனப் பரிந்து எழும் பாரதி ''அவன் முகத்தில் உமிழ்ந்துவிடு; மோதி மிதித்துவிடு ‘ என்றும் கூறுகிறான்.
இந்த முரண்பாட்டுக்குக் காரணம், வள்ளுவரும் பாரதியும், ஒருவனை, ஒரு சமயத்தில் தனி மனிதனாகவும், மற்றொரு சமயத்தில் (சமூகப் பொறுப்புள்ள) சமூகத்தின் அங்கத்தினனாகவும் பார்த்தார்கள். தனிமனிதனின் உரிமையை சமூக நியாயங்கள்/தர்மங்கள் கட்டுப்படுத்தும்; மட்டுப்படுத்தும்.

10

We do not want anymore Thiruvalluvars to preach. But,
We want many more Vivekanandas to act.

11

தமிழன் கண்ட தத்துவரீதியான உண்மைகள் சிந்திக்குந்தோரும் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. நமது இலக்கியங்களில் காணப்பெறும் கதாபாத்திரங்கள் மனிதர்களாக மாத்திரமின்றி, விலங்குகளாகவும், பறவைகளாகவும், ஊர்வனவாகவும், மண்ணாகவும் மலையாகவும், நீராகவும் நெருப்பாகவும், காற்றாகவும் விண்ணாகவுங்கூட உள்ளன. தமிழனின் சிந்தனை காலத்தைக்கடந்ததாகவும் , இடத்தைக் கடந்ததாகவுமின்றி தன்னையே கடந்ததாகவும் காணக் கிடைக்கிறது. அவனது சிந்தனை பிரபஞ்சப்படுத்தப்பட்ட சிந்தனை. இத்தகைய சிந்தனை வேறெந்த இனத்திலும இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்ப்டியே இருப்பினும் இத்தனை ஆழத்திலும் அகலத்திலும் இருக்கும் என்று தோன்றவில்லை.

12
கடவுள் நித்தியமானது. மனிதன் அநித்தியமானவன். ஆனால், நித்தியமான கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் அநித்தியமாக இருக்கும்போது, அநித்தியமான மனிதனால் படைக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளாகவும், எகிப்தின் பிரமிட் மூவாயிரம் ஆண்டுகளாகவும் நித்தியமாயிருக்கின்றன. எனவே, எது நித்தியம்? எது அநித்தியம்?

மனிதன் உயிருள்ள ஜீவராசி; கல்லும் மண்ணும் உயிரற்ற ஜடப்பொருள்கள். நிலக்கரி என்ற ஜடப்பொருளை உபயோகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை ஒரு பேஸ் மேக்கரில் அடைத்து இதயத்திர்க்கருகில் வைத்து விட்டால், உயிரை விட இருக்கும் நோயாளி பிழைத்துக்கொள்ளுகிறான். எனவே எது உயிருள்ளது? எது உயிரற்றது?

இக்கேள்விகளுக்கெல்லாம் விடையாயமைவது,எல்லாப் பொருட்களும் உயிருள்ளவையே;எல்லாப்பொருட்களும் நித்தியமானவையே; என்ற பொருளில் வரும் கீழ்க்கண்ட தொடர்கள்:

யாதுமாகி நின்றாய் காளி......”

”உலகம் யாவையும் தாமுளவாக்கலும்........”

எங்கெங்கும் காணினும் சக்தியடா........”

The creator Himself is creating, preserving and destroying The universe-.விவேகானந்தா.

இவை மெய்ஞ்ஞானிகளின் கூற்று.

விஞ்ஞானிகளும் இதையே கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

Every Matter in this universe is made out of the fundamental substance 'sub atomic particle'

Every Matter is energy.

Energy cannot be destroyed; Neither it could be created; it could only be transformed.

13

when one believes in such a thing, one feels secure in life... (Sigmund Freud)
ஆண்டவன் மேல் வைக்கும் நம்பிக்கை, லோகாயத வாழ்க்கையில் நமக்கு,நம்பிக்கையும், தெளிவும், பயமின்மையும் உண்டாகக்காரணமாயிருக்கிறது

14

Mathematicians group zero and infinity under the title "indeterminates". zero is among numbers, smaller than the smallest and infinity is bigger than the biggest. the mathematicians will not accept the process of addition of zero and infinity as both are entities whose values are unknown. Therefore no mathematical equation is possible with indeterminates.

But in spiritualism Zero merges with Infinity to become infinity. The merger happens as explained below:
When a (wo)man surrenders all his belongings ( phisycal, mental and spiritual) to the Infinity ( or The Almighty ), unconditionally, in the process of renunciation, (S)He becomes an ABSOLUTE Zero, whereby, his faculty of "differentiating" becomes extinct. On surrender to the Almighty, the Zero merges with Infinity to become Infinity. What a great fallacy to the mathematicians?

The truth that "bigger than the biggest" and "smaller than the smallest" are one and the same is evident from the saying by Vivekananda " IT is Anu at micro level and Vibhu at macro level "

”ஒவ்வொன்றாகச் சேர்த்தால் உலகம்.ஒவ்வொன்றாகப்பிரித்தால் தனி. ஒவ்வொரு தனியும் உலகத்தின் கூறே.”---பெரும்புலவர் இளங்குமரனார்.

”பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய்”--வள்ளலார்.ஜீவராசிகளின் தொகுப்பு இப் பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் பகுப்பு ஜீவராசிகள்.
15

தர்மம் தர்மம் என்று தர்மசிந்தனையிலேயே லயித்திருப்பதும்கூட நம்மை நாமே ஒரு கட்டுறு மனப்பாங்கினுக்குள்ளே வைத்திருப்பதேயாகும். ஒரு நல்ல சிந்தனையிலிருந்தாலும், அதிலிருந்து விடுபடாமல், அதற்குள்ளேயே உழன்றுகொண்டிருப்பது ஒரு ”கட்டுறு” மனப்பாங்கே.
இந்த கட்டுறு மனத்தில் நிலைத்திருப்பது நல்ல சிந்தனையேயானாலும், இம்மனப்பாங்கு ஒரு தங்கத்தாலான அழகான சிறைக் கூண்டே.

மனிதனின் ஆத்மா கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டு இக்கூண்டிலிருந்து விடுபட்டு, பேரானந்தப் பெருவெள்ளத்தை நோக்கி, எல்லையில்லா இம் மோனப்பெருவெளியில் சிறகடித்துப் பறக்கும்போதுதான் தன்னை இப் பிரபஞ்சத்தோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளுகிறது. தானும் இப்பிரபஞ்சமும் வேறல்ல; ஒன்றே என்று உணரும் இந்நிலைதான் ”சந்நியாஸ்.”
சந்நியாசம் என்பது விரக்தியின் விளைவல்ல. பேரானந்தத்தில் முகிழ்ப்பது.
(காண்க: திரு. இறையன்பு. அவர்களின் “சந்நியாஸ்” என்ற சிறு கதை; கேட்க: சுவாமி நித்யானந்தரின் பேச்சு. பார்க்க: “சோவி”ன் எங்கே பிராமணன்?)
16

ஒரு மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை உள்ள காலத்தை வாழ்க்கை அல்லது வாழ் நாள் என்று கணக்கிடுகிறார்கள். இந்த கால கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளியாகவும் இருக்கலாம் அல்லது ஒரு நூற்றாண்டாகவும் இருக்கலாம். அதன் அளவு ஒருவருக்கும் தெரியாது; அனுமானிக்கவும் முடியாது. வாழ்க்கையின் கால வரம்பு நிலையற்றதாக இருக்கிறது. ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். ஆகவே வாழ்க்கை நிலையற்றது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். நிலையாமை என்பது வேறு; இல்லாமை என்பது வேறு, ஒரு மணித்துளி வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது. நூறாண்டுகள் வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது, ஆனால், இருவருக்குமே முடிவு எப்போது வரும் என்று தெரியாமலே இருந்தது; அதாவது நிலையாமை இருந்தது.
ஆகவே, வாழ்க்கையில் நிலையாமை இருந்தாலும், ஒருவனுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ்ந்தே ஆகவேண்டும். தற்கொலை செய்துகொள்ள முடியாது,
25 வருட வாழ்க்கையை அவன் பிரம்மச்சாரியாகக் கழிக்க வேண்டும். மீதமிருந்தால், அடுத்த 25 வருட வாழ்க்கையை அவன் கிருஹஸ்தனாகக் கழிக்க வேண்டும். மேலும் மீதமிருந்தால் அடுத்த 10 வருட வாழ்க்கையை வானப்பிரஸ்தனாகக் கழிக்க வேண்டும். எஞ்சியிருந்தால் மீதமுள்ள வாழ்க்கையை சந்நியாசியாகக் கழிக்க வேண்டும்.
இப்படி வாழும் நான்கு நிலைகளில் கிருஹஸ்த வாழ்க்கையே சிறந்தது. ஏனெனில், பிரம்மச்சாரிக்கும், வாணப்பிரஸ்தனுக்கும், சந்நியாசிக்கும் சோறு போட கிருஹஸ்தனால் மட்டுமே முடியும். கிருஹஸ்தன்( இல் வாழ்வான் ) இல்லாவிட்டால், மற்ற மூவரும் இல்லை. இதனையே, வள்ளுவர்,
”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.”-----என்றார்.

17
ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது பதறித் துடித்துப் போய் உதவுகிறேன். நாளைக்கு நாம் என்ன செய்வோம் என்ற எண்ணமே இல்லாது உடனடியாகப் போய் உதவுகிறேன். அப்படி என்னிடம் உதவியைப் பெறுகிறவர்கள் என்னை உதாசீனப் படுத்தியவர்களாயும், கேவலமாகப் பேசியவர்களாயும் கூட இருக்கிறார்கள். ஆண்டவன் ஏன் என்னை அப்படிப்பட்டவர்களிடம் அழைத்துச் செல்கிறான் என்று நினைத்துக் குழம்பும்போது என் உள் மனத்துள் ஒரு ஒலி கேட்கிறது. அந்த ஒலியை உற்றுக் கேட்டால் அது “ யார் தருவார் இந்த அரியாசனம்” என்ற டி எம். சவுந்தர ராஜன் பாடலாக இருக்கிறது. என்னை உதாசீனப் படுத்தியவர்களுக்குக் கூட உதவி செய்யுமாறு பணிக்கும்போது ஆண்டவன் எனக்கு ஒரு சிறந்த அரியாசனத்தைத் தந்தருளுகிறான் என்பதுதான் அப்பாடலின் பொருளா???

18
Your Life is a gift from the creator
Your gift back to the creator is what you do with your life.----Billy Mills
19
மனிதன் எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றை கடவுளாகக் கண்டான். இருள் எங்கும் நிறைந்திருக்க இயலாது. ஒளியே அல்லது சோதியே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுடையது. எனவே எங்கும் நிறைந்த பரம்பொருளை சோதியாக வணங்கினான்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி--மாணிக்கவாசகர்.
அருட்பெருஞ்சோதி-----வள்ளலார்.

20
“தாமுள வாக்கலும்......”
”உலகம் யாவையும் தாமுளவாக்கலும்.............” ( கடவுள் வாழ்த்து )
”என்றுமுள தென் தமிழை இயம்பி இசை கொண்டான்” ( அகத்தியப் படலம் )
“உள” என்னும் சொல், இராமயணத்தில் ஒரு இடத்தில், ‘இருப்பி’ன் ஒரு சிறப்பான குணத்தைக் குறிக்க, “என்றும்” எனும் அடைமொழியுடனும், வேறொரு இடத்தில், வேறொரு பொருளைக் குறிக்க ”தாம்” எனும் அடைமொழியுடனும், உபயோகப்படுத்தப்படுகிறது.
கடவுள் வாழ்த்துப் பாடலில் “தாம் உள” என்றும், அகத்தியப் படலத்தில், “என்றும் உள” என்றும் கம்பன், உபயோகப் படுத்தியிருக்கிறான்.
கடவுள் வாழ்த்துப் பாடலில், “தாமுளவாக்கல்” என்ற சொற்றொடர், நாமெல்லோருக்கும் -- ஏன்? -- இப் பிரபஞ்ச முழுமைக்குமே “தலைவராக” இருக்கும் பரம்பொருளின், நீண்ட விளையாட்டின் ஒரு பகுதியைக்குறிக்க வருகிறது.
இப்போது பரம்பொருளின் விளையாட்டைப் பார்ப்போம்.
ஒரு சிறு குழந்தை,( பரம்பொருளைப் போலவே ), கடற்கரையில், ஈரமணலில் வீடு கட்டி விளையாடுகிறது. முதலில், முழுக் கவனத்துடன் வீட்டைக் கட்டுகிறது. கட்டிய வீட்டை, அலையோ அல்லது பிற குழந்தைகளோ வந்து கலைத்து விடாமல், காப்பாற்றுகிறது. சுற்றிச் சுற்றி வந்து தன் வீட்டின் அழகில் லயித்துப் போகிறது. அவ்வீட்டைக் கட்டிய குழந்தை, கட்டிய போதும், கட்டி முடித்தபோதும், தானே அவ்வீடாகவும், அவ்வீடே தானாகவும் இருக்கும்படியாக அக் கட்டட வேலையில் தன்னை மறந்து போகிறது. அம்மணல் வீட்டை யாரேனும் அழித்து விட்டால், அச் செயலால் தானே அழிந்து போனதாகக் கருதுகிறது. தான் வேறு அந்த மணல் வீடு வேறு என்று அக் குழந்தை கருதுவதில்லை. அக் குழந்தை மணல் வீட்டுக்கு வெளியே இருந்தாலும் அதன் உயிர் அவ்வீட்டிற்கு உள்ளேதான் இருக்கிறது.அதாவது அக்குழந்தை “தாமுளவாக” அவ் வீட்டை “ஆக்கி”யிருக்கிறது. அக்குழந்தையின் செயலாக்கம் “தாமுளவாக ஆக்கல்”.
தான் ஆக்கிய அந்த மணல் வீட்டை, யாராலும் அழிந்து போகாமல் காப்பற்றும்போது, அக் குழந்தையின் அக்கறை நமக்குப் புரிகிறது. அலையினால் வீடு அழிந்து விடுமோ என நினைக்கும்போது பதறி விடுகிறது. அவ்வீடு என்றும் “நிலை பெற்றி”ருக்க வேண்டுமென நினைக்கிறது.
ஆனால், சிறிது நேரம் அவ்வீட்டையே பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, என்ன நினைத்தோ அவ்வீட்டைத் தன் கால்களாலேயே இடறி அழித்து “நீக்கி” விடுகிறது.
”நீக்கிய” வீட்டை, அதே மணல் கொண்டு மறுபடியும் “ஆக்கு”கிறது.
இப்படியே, ஆக்கலையும், நிலைபெறுத்தலையும், நீக்கலையும் ஒரு சுழற்ச்சியில் மறுபடியும், மறுபடியும் செய்துகொண்டே இருக்கிறது.
இப்போது மாலை மறைந்து இரவு வரப்போகிறது. பெற்றோர் அக்குழந்தையை அழைத்தால், அது வீட்டிற்கு வர மறுக்கிறது. குழந்தையின் மனம் விளையாட்டில் ஒன்றிப்போயிருக்கிறது. அவ்விளையாட்டு அதன் மனத்தை எவ்வளவு ஆழத்திற்கு ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது? அந்த ஆக்கிரமிப்பின் நீள, அகலங்கள் எவ்வளவு? என்று எவராலும் அளந்தறிய இயலாது. இந்த முப்பரிமாணங்களையும் அளக்க எந்த அளவு கோலும் அல்லது ‘அலகு’ம் இல்லை. இப்பரிமாணங்களுக்க்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த ஆக்கிரமிப்பு. எனவே இவ்விளையாட்டு ”அலகிலா” விளையாட்டு. இவ்விளையாட்டிலிருந்து, குழந்தை வர (நீங்க) மறுப்பதால், இது ஒரு ”நீங்கலா” விளையாட்டு. அதாவது, இது ஒரு ‘நீங்கலா அலகிலா விளையாட்டு’.
இதைப் போன்றதே, ”நாங்கள்” “சரண்” அடைந்திருக்கும் “தலைவர்” அவர்களின் விளையாட்டும்.
உலகம் என்னும் சொல் நாம் வசிக்கும் இந்த உலகை மட்டுமே குறிப்பதாயின், இப் பிரபஞ்சம் பல உலகங்களைக் கொண்டதாகும். ( solar systems, milky ways and their galaxies ) இதனையே,
உலகம் யாவையும் என கம்பனும்,
உலகெலாம் என சேக்கிழாரும்,
பல உலகும் என சுந்தரம் பிள்ளையும் கூறுகிறார்கள்.
நம் தலைவனாகிய பரம்பொருள், இவ்”வுலகம் யாவையும்”,( அங்கே வாழும் ”பல்லுயிர்களை”யும் ) தாமே உளவாக ஆக்கினான். அதாவது தன்னால் படைக்கப் பட்ட உயிரிகள் அனைத்திலும் தானே இருந்தான்; இருக்கிறான்.
The creator created all his creations
In such a way that
The creator himself was within all his creations.
என்று ஆங்கிலத்தில் கூறலாம்.
The creator himself is creating, preserving and destroying என்று விவேகானந்தர் கூறுகிறார். அவன் ஆக்கலையும், நிலைபெறுத்தலையும், நீக்கலையும் நீங்கலா அலகிலா விளையாட்டாக விளையாடுகிறான். அவன் இந்த அலகிலா நீங்கலா விளையாட்டிலிருந்து நீங்கினால்,( ”ஆடிய பாத”த்தை ஆடாமல் நிறுத்தினால் – ”தூக்கிய திருவடி”யைக் கீழே தரையில் வைத்துவிட்டால் ) பிரபஞ்சம் இயங்காது நின்று போகும்.
இவ்விளையாட்டைக் குறிக்கும் பாடலில், கம்பன் உபயோகப் படுத்திய ”தாமுள” என்ற சொற்றொடர் மிகவும் பொருள் பொதிந்தது. கடவுள் தன்னிலிருந்து மற்றவற்றைப் படைத்தான் என்று பைபிள் ( ”நானே என்றும் வழியாயும், சத்தியமாயும், ஜீவனுமாயுமிருக்கிறேன்” ) கூறுவதும், பிரஜாபதி தன்னிலிருந்து நால்வகை வருணத்தாரைப் படைத்தான் என்று ”இருக்கு” வேதம் கூறுவதும், ”யாதுமாகி நின்றாய்” என்று பாரதி கூறுவதும், ”உன்னுதரத்துதித்தெழுந்தே” என்று சுந்தரம் பிள்ளை உபமானமாகக் கூறுவதும், “எல்லாமுமாகி நின்றாய் நீயே” என்ற ஆன்றோர் வாக்கும் இந்தத் ‘தாமுள’ என்ற சொல்லில் பொதிந்து கிடக்கிறது.
கடவுள் வாழ்த்துப் பாடல், இராமவதாரக் காப்பியத்தில் இருந்தாலும், கடவுள் வாழ்த்துப்ப் பாடலில், கடவுளே கதாநாயகன்; இராமனல்லன். அவனது சிறப்பியல்புகளைப் பாடுதலே சிறந்தது. அதுவே மரபு. படைக்கப் பட்ட பொருட்கள் யாவினும் படைத்தவனே வாழுமாறு படைத்தலே, படைத்தவனுக்கும் படைக்கப்பட்ட பொருள்களுக்கும் பேதமில்லை என்ற உயர்ந்த சித்தாந்தக் கருத்தும், “என்று நீ, அன்று நான்” என்ற தாயுமானவரின் கூற்றும் நிலைப் பாட்டினை யடைய உதவும்; இறைவனுக்குச் சிறப்பையளிக்கும்.
எனவே, இப்படிப் பட்ட சிறப்புப் பொருளைத் தரும் வண்ணம், “தாம்’ என்ற அடைமொழியைச் சேர்த்தே ‘தாமுள’ என்ற சொற்ரொடருக்குப் பொருள் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அச் சொற்றொடரில் புதைந்து கிடக்கும் சிறந்த சிந்தனைகள் வெளிப்படும்.
குழந்தை கட்டிய மணல் வீட்டை இடித்ததன் பின், மறுபடியும் வீடு கட்ட அதே மணலைத்தான் உபயோகப் படுத்துகிறது. வீடு இடிந்தாலும் மணல் மறைய வில்லை. அம்மணல் ‘இருந்தபடி இருக்க’ அதே மணலிலிருந்து வேறு வீடு கட்டப்படுகிறது. ‘தாம்’ என்ற அடைமொழியை விடுத்து, ‘உள’ என்ற சொல்லை மாத்திரமே உபயோகித்து விளக்கம் சொன்னால், இல்லாத வீட்டை இருந்த மணலிலிருந்து கட்டியதாகக் கூறலாமே தவிர, இதனினும் மேம்பட்ட பொருளைக் கொள்ள இயலாது. ’தாமுள’ என்று கூறும்போதுதான் அக் குழந்தை தானே வீடாக மனத்தால் வாழும் வாழ்க்கை புலப்படுகிறது.

எந்த ஒரு செயலுக்கும் கர்த்தா, காரணம், கருவி, காரியம் என்ற நான்கும் உண்டு. இங்கு தாம் என்ற சொல்லுக்குறிய இறைவன் கர்த்தா. இப்பிரபஞ்சத்தை ஆக்கல் காரியம். இறையினது பேராற்றல் கருவி. காரணம் விளங்கவில்லை. காரியத்தின் பயனாகிய இப்பிரபஞ்சத்தினுள்ளே கர்த்தாவே இருக்கிறான் என்பதே கம்பன் சொல்ல வந்தது.
ஆக்கலுக்கு முன்னரே இருந்த உயிரிகளைக்குறிக்க (மணல்) கம்பன் ”என்றுமுள” என்ற சொல்லை அகத்தியப் படலத்தில் கூறியதைப் போல் உபயோகித்திருக்கலாம். அப்படி உபயோகித்திருந்தால், உயிரிகள் அநாதியானவை என்று மட்டுமே கூறலாமே தவிர, அவற்றை ஆக்கியவனே அவற்றினுள்ளே இருந்து இயக்குகிறான் என்ற பேருண்மை விளக்கப்படாமல் போயிருக்கும். என்றுமுள என்று கூறாமல் தாமுள என்று கூறியதனாலேயே ஆக்கப்பட்டவை அனைத்திலும் ஆக்கியவனே இருந்து இயக்குகிறான் என்னும் பேருண்மை வெளிப்படுகிறது.

எனவே ‘தாமுள’ என்று சொல்லாமல் ‘உள’ என்று மாத்திரமே சொல்லிப் பொருளுரைத்தல் சரியான முறையாகத் தோன்றவில்லை.கம்பனுடைய நோக்கினுக்கு இது முரணானது. தமிழ்ச் சான்றோர் மேலும் விளக்கினால் நன்று.

பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய ‘கம்பன்-- ஒரு புதிய பார்வை’ என்ற நூலில் தாம் என்ற சொல்லை விடுத்து உள என்ற சொல்லை மாத்திரமே கொண்டு விளக்கமளிக்கப்படுகிறது. அவன் இல்லாதவைகளிலிருந்து உயிரிகளைப் படைக்கவில்லை. இதற்கு முன்னரே இருந்தவைகளிலிருந்துதான் உலகைப் படைத்தான் என்ற “தற்காரிய வாத“ க் கோட்ப்பாட்டினை வலியுறுத்துதற்காக இவ்விளக்கம் தரப்படுகிறது. அப்புத்தகத்தினைப் படித்த பின்னரே இச் சிந்தனை தோன்றியது.
( அன்னாமலப் பல்கலைக் கழகம், கோவை கம்பன் கழகம் இவர்களால் வெளியிடப்பட்ட இராமாயணப் பதிப்புகளில் இவ் விளக்கம் காணப் படவில்லை. )

21
மஹாத்மா காந்தியை இவ்வுலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது; உலக மகாசபை அக்டோபர் 2ம் தேதியை உலக சமாதான நாளாக அறிவித்ததின் மூலம். அது போலவே திருக்குறளை உலகப் பொது மறையாக அறிவிக்கும் நாள் எதுவோ?
22
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது அவர் மீது இராசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் மன்றத்தின் உள்ளே நுழையும்போது, அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டிய நீதியரசர் தம் இருக்கையிலிருந்து எழுந்து நின்று அடிகளாருக்கு வணக்கம் சொல்லுகிறார். இக்காட்சி சர் அட்டன்பரோ எடுத்த ”காந்தி” என்ற திரைப்படத்தில் வருகிறது.
நிறவெறி பிடித்தவர்களும், ஏகாதிபத்திய வாதிகளுமான பிரிட்டிஷ்காரர்களின் நீதியரசர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய விசாரணைக் கைதியை நோக்கி எழுந்து நின்று வணக்கம் கூறுவது நினைத்துப் பார்க்கவே இயலாத நிகழ்வு. அப்படி அவரை எழுந்து நிற்க வைத்தது எது? அடிகளாரின் கையில் துப்பாக்கி எதுவும் இருந்திருக்க இயலாது !
தஞ்சை மாவட்டத்தில், வலங்கைமான் என்ற குக்கிராமத்தில் ஏழைப்பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரான மகாகணம் சீநிவாச சாஸ்திரியார், ஆங்கிலப் பேரரசின், மன்னர்மன்னனின் "Privy council " அங்கத்தினராகவும் அப்பேரரசில் “ Rt. Honourable “ என்ற பட்டத்தைப் பெற்ற சிலரில் ஒருவராகவும், காங்கிரஸ் மகாசபையின் தலைவராகவும், கோகலேயின் இந்திய ஊழியர் சங்கத்தின் தென்னாட்டுத் தலைவருமாக இருந்து பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமாக இருந்தவர். ஒரு Privy council கூட்டத்தில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் “இந்தியர்கள் ('Fanatic') பேனடிக் என்று கூறியது தவறு என்று எடுத்துக்காட்டி அது ”பெனாடிக்”என்று உச்சரிக்கப்பட வேண்டும் என திருத்திக் காட்டினார். அரசவை அதனை ஒத்துக்கொண்டது. சாஸ்திரியாருக்கு அப்படிப்பட்ட தைரியத்தைக் கொடுத்தது எது?
சர்வமத மகாசபையில், சுவாமி விவேகானந்தர், ”எனது அன்பிற்குறிய சகோதர சகோதரிகளே” எனக்கூறி தனது பேச்சை ஆரம்பிக்கும்போதே, அமெரிக்கர்கள் எழுந்து நின்று கரஒலி செய்து மகிழ்ச்சியையும் மரியாதையையும் காட்டுவதர்க்குப் பின்னணியாய் இருந்தது எது?
இலண்டன் மாநகரில், பாரதீய வித்யாபவனத்தின் புதுக்கட்டிடத்தைக் கட்ட ஆரம்பிக்கும்போது, அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, பழைய கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தாலும் அக்கட்டிடத்திற்கு நடப்பட்டிருந்த அடிக்கல் பழைய செய்திகளுடன் அகற்றப்படாமலே பெருந்தன்மையுடன் விட்டுவைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு மகிழ்ந்த, நெகிழ்ந்த, மவுண்ட் பேட்டன் “ இப்படிப்பட்ட பெருந்தன்மையை “என்னுடைய” இந்தியர்களைத் தவிர வேறு யாரிடம் காண இயலும்? ” எனக் கூறியிருக்கிறார். அப்படி அவரைக் கூறவைத்தது எது?
இந்தியா சுதந்திரமடைந்தபோது, பிரிட்டீஷ் கொடியை இறக்கிவிட்டு சுதந்திரக்கொடியை கம்பத்தில் ஏற்றத் தகுதியானவர் யார் என்று நேரு காந்தியைக் கேட்க, அதற்கு அவரை ”மவுண்ட் பேட்டனைத் தவிர யார் இருக்கிறார்கள்?” என்று கூற வைத்தது எது?
தமிழராகிய சென்பகராமன் பிள்ளை, கெய்செர், ஹிட்லெர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். நாஜிக்கட்சியில் சேர்ந்தவர். வெளியே இருந்துகொண்டே ப்ரிட்டிஷாரை நாட்டிலிருந்து வெளியேற்ற பாடுபட்டவர். ஒரு தடவை ஹிட்லெர் ”இந்தியர்கள் பிரிட்டீஷாருக்கு அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள்” என்று கூறியதை செண்பகராமன் கண்டித்து ஹிட்லெரிடமிருந்து மன்னிப்புக் கடிதம் பெற்றார். அப்படிப்பட்ட துணிச்சலை அவருக்குக் கொடுத்தது எது?
இப்படிப்பட்ட சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், பிறரும், இந்தியர்களுக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கவும், அந்த மரியாதைக்கு இந்தியர்களை தகுதியுள்ளவர்களாக ஆக்கவும் அடிப்படைக் காரணமாக இருந்தது-இருப்பது-இனிமேலும் இருக்கப் போவது, காலங்காலமாக இந்த மண்ணில் வாழ்ந்த மகான்களும், ரிஷிகளும் பெரியோர்களும் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் ஆன்ம பலமே.
23

இப்பிரபஞ்சத்தின் பகுப்பு சீவராசிகள்; சீவராசிகளின் தொகுப்பு இப்பிரபஞ்சம்.

தன்னை இப்பிரபஞ்சத்தின் பகுப்பாக (ஒரு சீவராசியாக)ப் பார்ப்பது வாணப்பிரஸ்தத்தில்; தன்னை சீவராசிகளின் தொகுப்பாக (பிரபஞ்சமாக)ப் பார்ப்பது சந்நியாச நிலையில்.
24

ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டிய செய்திகள் இரண்டு.

1. நான் யார்?
2.நான் என்ன செய்ய வேண்டும்?

இவற்றினுக்கு விடை:

1. பிரபஞ்சம் பூராவும் பரவி நிற்கும் மகா சக்தியில் நான் ஒரு துகள்.
2. எத்துணைப் பிறவி எடுப்பினும் அத்துணைப் பிறவியிலும்
என் கடன் பணிசெய்து கிடப்பதே.

அம்மகா சக்தியின் துகள்களாகிய நாம் ஒவ்வொருவரும்(அம்மகா சக்தியைப் போன்றே) ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியே, மலத் திரைகள் நம்மை மறைக்காதிருக்கும் வரை.

பணி செய்யும் மனம் கருணையின் விளைவு.

எனவே வள்ளலார் மனிதனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய இவ்விரண்டு
செய்திகளையும் மகா மந்திரமாக்கி,

“அருட் பெருஞ்சோதி”
”தனிப் பெருங்கருணை” என்றார்.

இதனையே மணிவாசகப் பெருமான்,

1.”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி”,

2.”பெருங்கருணைப் பேராறு”

என்று இரு வரிகளில் கூறினார்.

வள்ளலாரின் வாய்ச் சொற்கள் மணிவாசகருக்குச் சொந்தமானவையே.

”ஆதியும்.........சோதி” என்பதனையும்,” “என்று நீ அன்று நான்” என்ற
தாயுமானாரின் வாக்கையும் இணைத்துப் படித்தால், நாமும் இறையே என்பது விளங்கும்.
25

'பிறவா வரம் வேண்டும் இறைவா' என்று நான் ஒரு போதும் இறைவனை வேண்டமாட்டேன். திரும்பத் திரும்பப் பிறக்க வேண்டும் என்றே கேட்பேன். ஆனால், தஞ்சை மண்ணில் தான் பிறக்க வேண்டும் என்று கேட்பேன்.

ஏனெனில்,

வள்ளலார் “ஈ என்று எனை ஒருவன் இரந்திட்ட போது இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறம் வேண்டும்” என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் வரம் கேட்கிறார். இக்கோட்பாட்டினைப் பின்பற்ற - உதவி கேட்டு வந்த அத்துனைப் பேருக்கும் உதவ ஒரு பிறவி போதாது - பல பிறவிகள் எடுத்தல் வேண்டும். அதுவும் அதே மண்ணில் திரும்பத் திரும்பப் பிறந்தால் தான் இயலும். எனது ஒரு பிறவியில் உதவி பெற முடியாமல் விட்டுப் போனவர்களுக்கு அடுத்த பிறவியிலாவது உதவ வேண்டும். எத்துனைப் பிறவி எடுப்பினும் அத்துனைப் பிறவியினும் ”என் கடன் பணி செய்து கிடப்பதே.”

பிறப்புக்களுக்கு அப்பாலே சென்று உடன்பிறப்புக்களுக்கு மறுபடி மறுபடி உதவி செய்தலால் ஒரு நாள் நான் சிவமாகிப் போவேன்.

அறியானாயிருந்த நான் அன்பே சிவமென்பதை அறிந்த பின் 'அன்பே சிவமாய் அமர்ந்திருப்பேன்.'
26

பேராசிரியர் சோ.ந.கந்தசாமி கூறுவார்;
”Sat, Sit, Anandam are the three Eternal Attributes of the Absolute.”
27

பேதங்கள்
வர்க்கபேதங்களற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதே மார்க்சீயவாதிகளின் கோரிக்கை. அப்படியென்றால் என்ன?
பல வர்க்கங்களைக் கொண்டதே சமூகம். எனவே வர்க்கங்களற்ற சமூகம் என்று ஒன்றுமில்லை. துணிவெளுப்பவன் ,வக்கில் கணக்காயர், பொறியாளர், மருத்துவர் என்று பல துறைகளைச் ( வர்க்கங்களை ) சேர்ந்தவர்கள் சமூகத்தில் இருக்கும்வரை வர்க்கங்கள் இருந்தே தீரும். அதுபோலவே, ஒவ்வொரு வர்க்கமும் சமூகத்திற்காற்றவேண்டிய கடமைகளில் பேதங்களிருப்பதால், பேதங்களற்ற வர்க்கங்களும் இருக்க சாத்தியமில்லை.
எனவே பொது உடைமை வாதிகள், பேதங்கள் வாயிலாக ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தைச் சுரண்டுவதையே இப்படிக் குறிப்பிடுகிறார்கள் என்று கொள்ளலாம்.
பேதங்களற்ற சமூகமென்ற ஒன்றில்லையெனக் கண்டோம். அது மாத்திரமல்ல. பேதங்கள் மனித வாழ்க்கைக்கு சுவையூட்டுபவை. அவை நமக்கு முக்கியமான தேவை. அவை இல்லாத வழ்க்கையை நினைவுபடுத்திப் பார்ப்போம்.
ஒவ்வொரு நாளும் மாறுதலே (பேதங்களே) இல்லாமல் ஒரே வகையான சாப்பாட்டை சாப்பிட்டால், தஞ்சவூர்க்காரனின் ”நாக்கு செத்து”ப்போகும்.
பெண் குழந்தைகள் ஒரேமாதிரியான சீருடையே தினமும் அணிந்து பள்ளிக்கு வந்தால், பல நிறங்களில் ஆடையணிந்து பட்டாம்பூச்சிபோல் சிறகடித்து விளையாடும் அழகைக் காண இயலாது.
மின்கடத்தியான செம்புடன் ஒரு அழுக்கைக் (பேதத்தை)கலந்தால், “அரைவேக்காடு” செமி கடத்தி கிடைக்கிறது. இந்த செமி கண்டக்டர் இல்லையென்றால் மின்னணு இயலே கிடையாது. இருபத்தி ஓராம் நூற்றாண்டே கிடையாது.
“ஏழு சுரங்களில் எத்தனை ராகம்” என்பதொரு பாட்டு. இந்த ஏழு சுரங்களுடன் “சுரபேதங்களை”க் கலந்து, பதினாறு; இருபத்திரண்டு என்று அதிகப்படுத்தி உபயோகிக்கும்போது பல இனிய சங்கதிகளை உருவாக்க முடிகிறது. இந்த சுரபேதங்கள் இசைக்கு இனிமையூட்டுபவை.
மனிதவாழ்க்கையில் பேதங்களைக் கணக்கிலெடுக்காமல் வழங்கும் தீர்ப்பு நீதி. பேதங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு வழங்கும் தீர்ப்பு நியாயம்/தர்மம்.
நாம் பேதங்கள் இயற்கையாய் இருப்பதை உணரவேண்டும். அவற்றைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பிறரிடம் ஒற்றுமையய் வாழும் வழியைக் காண வேண்டும். இதைத்தானே ஆங்கிலத்தில் unity in diversity என்று கூறுகிறார்கள்.
மனிதர்களுக்கிடையே உள்ள பேதங்களைக் கணக்கிலெடுப்பதையே வள்ளுவர் ”இதனை இவன் முடிக்கும்..........” என்ற குறளில் கூறக் காண்கிறோம். பேதங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு அவரவருக்குரிய துறையையும், அத்துறையில் அவரவருக்குரிய நிலையையும் தீர்மானித்தே உலகம் முழுதும் அரசுத் துறையிலும் பொதுத்துறையிலும் அலுவலர்கள் நியமிக்கப் படுகிறார்கள். துறைகளை categories என்றும், நிலைகளை seniority/position என்றும் கூறுகிறார்கள்.Categories என்பது வர்ணங்கள் என்றும் seniority என்பது ஆசிரமம் என்றும் ஆகிறது. ஆகவே வர்னாச்ரம தத்துவம் உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது, ஏனெனில் இத் தத்துவம் பேதங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு அவரவரது திறமை, ஆற்றல் அனுபவம் இவற்றின் அடிப்படையில் செயல்படுகிறது.
மேலே கூறப்பட்ட குறளை நாம் ஒத்துக்கொண்டால், வர்ணாசிரம தத்துவத்தை ஒத்துக்கொண்டவர்களாகிறோம்.
வேதகாலத்தில், இந்த ஒரு ஒழுங்கான நெறி, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக, திரிக்கப்பட்டு வர்ணாசிரம தர்மமாக செயல் படுத்தப்பட்டது. திறமை, விருப்பம், தகுதி இவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஆசிரம தத்துவம், திரிக்கப்பட்ட ஆசிரம தர்மமாக உருவாகியிருக்கிறதெனக்கொள்ளலாம். உலக மாந்தர் அனைவரும் இத்தத்துவத்தை பின்பற்றினார்கள். ஆனால் திரிக்கப்பட்ட தர்மத்தை ஒத்துக்கொள்ளவில்லை.

28.

திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யரிடம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை யின் தமக்கை பாடம் கேட்டுக்கொண்டிருந்தபோது, அந்த சஹானா வர்ணம் முடிவடைந்தபின், அந்த வர்ணத்தை தன்னாலும் பாட இயலும் என்று நான்கு வயது ராஜரத்தினம் சொல்ல, வியப்படைந்த ஐயர் அவனைப் பாடச்சொல்ல, அவன் அதைப் பாடிக்காட்டினான். “குலவித்தை கல்லாமல் பாகம் பெறும்”
29

” யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் நிந்தன் செயல்களின்றி வேறில்லை “.

மேலே கண்ட வரிகளில் காணும் ‘தீது’ , ’நன்மை’இரண்டும் வாழ்வியல் கோட்பாடுகள்/உண்மைகள். இக்கோட்பாடுகளின்படி நடக்கும் செயற்பாடுகள் யாவும் “செயல்கள்” என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இச்செயல்களைச் செய்ய சில வழிகள் உண்டு.

கோட்பாடுகள், செயல்பாடுகள், வழிகள் இவை யாவும் தானேயாகி, மேலும் இவற்றில் ஈடுபட்டிருக்கிற ஜீவராசிகளுமாகி  நிற்கிறாள் காளி என்பதே இப்பாடலின் பொருள்.
இதையே, Bible ல் “ Jesus said, ’I am the way, truth and life' ”( John 14:6 ) என்று கூறப்படுகிறது.                
 30
தமிழ் இனத்தின் தொண்மையையும், மேண்மையையும், அவர்களின் சமையற்கலையினை மட்டுமே ஆய்வு செய்தும் அறியலாம்.தமிழனின் சமையற்கலை உலகிலேயே உயர்ந்தது.


31

நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அறிந்து கொள்ள, நிறைய படிக்க வேண்டியதில்லை. நிரம்ப கேட்க வேண்டியதில்லை. அனுபவ அறிவும் தேவையில்லை.
சுற்றியிருக்கும் சூழலிலிருந்து நம்மைக் காத்துக் கொ
ண்டு, நாம் பிறராக வாழாமல், நாமாகவே வாழ்ந்தாலே போதுமானது.

ஏனெனில், மனித இனத்தின் இயல்பு கருணையும் மகிழ்ச்சியுமாம். இந்த இரண்டின் அடிப்படையில் வாழும் வாழ்க்கை நமக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் வாழ்க்கையாகவே அமையும். அர்த்தமுள்ள வாழ்க்கையாகவே இருக்கும்.

கீழ்க்கண்ட வலை தளத்திற்குச் செல்லவும்..
www.thamizharnagarigam.com
32

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகா சக்தியில் நானொரு துகள். பல கோடி நூறாயிரம் துகள்களின் தொகுப்பு இப்பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் பகுப்பு சீவராசிகள். இதுவே எனக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பு.

சீவராசிகள் என்ற சொல்லை எடுத்துவிட்டு மனிதர்கள் என்ற சொல்லைப் போட்டால் மேலே கண்ட வாசகம் எனக்கும் இவ்வுலகிற்குமான தொடர்பாகும்.

பல நாடுகளில் எனக்குக் குடியுரிமை கிடைத்தபோது அதைத் தவிர்த்து ” நான் ஒரு இந்தியனாகவே இறப்பேன் “ என்று சொன்னேன். இது எனக்கும் இந்தியாவிற்குமுள்ள தொடர்பைச் சுட்டும்.

தமிழ், தமிழ்நாடு, தமிழினம், தமிழ்ப்பண்பாடு இவையே உலகில் உயர்ந்தவை என்ற என் தீர்ப்பு எனக்கும் தமிழ் மாநிலத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும்.

” பச்சைப் பசேலென்ற வயல்கள், அவற்றினிடையே தோன்றும் தென்னை மரக்கூட்டம், அதன் நடுவிலே தோன்றும் கோபுரம், கோயிலுக்கருகே தோன்றும் தடாகம், அதில் காணும் அல்லியும் தாமரையும், கோயில் சுற்றில் அமர்ந்து திருமுறைகளை இசைக்கும் ஓதுவார், அந்த நாதத்தின் இனிமை, அந்த இனிமையிலே உள் நின்றியக்கும் ஆடவல்லான், அக்கோயிலோடு இணைந்திருக்கும் கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், இசை, கூத்து ஆகிய கலைகள், ஆடவல்லானிடம் விண்ணப்பிக்க வரும் மனிதக்கூட்டம் இவற்றையெல்லாம் விடுத்து சித்திரகுப்தனூடே யான் செல்லேன் “ எனக்கூறும் என் மனத்துணிவு எனக்கும் தஞ்சாவூருக்கும் உள்ள தொடர்பை விளக்கும்.

தஞ்சையிலிருந்து ஆரம்பித்து இப்பிரபஞ்சம் முழுமையும் நான் ஆக்கிரமித்து நிற்கிறேன். இப்பிரபஞ்சம் முழுமையும் எனக்குள்ளே விரவி நிற்கிறது. நானும் இப்பிரபஞ்சமும் வேறல்ல. நான் ஒரு பிரபஞ்சன்.

இப்போது “ மரணமிலாப் பெருவாழ்வு ” என்பது புரிகிறது. ” சாகாக்கலை “ என்பது ’கைவந்தகலை’ யாகிவிட்டது.  

No comments: