Thursday, July 31, 2008

தஞ்சை மண்.

தஞ்சாவூர்.


காவேரியின் கடைமடைப் பகுதியில், ”சோணாடு சோறுடைத்து” என்றழைக்கப்பட்ட சோழவள நாட்டின் தலை நகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் இந்த ஊர் என்னுடைய சொந்த ஊர்.

இந்த ஊரைப்பற்றிய இக்கட்டுரை, ஒரு தொல்லியல் ஆய்வுக் கட்டுரையோ, சரித்திரக் கட்டுரையோ அல்லது இலக்கியக் கட்டுரையோ அன்று. இந்த ஊரிலே பிறந்து எழுபது ஆண்டுகளாய் வாழ்ந்துகொண்டிருக்கும், ஒரு முதிய குடிமகனின் எண்ணச் சிதறல்களே. இதில், சரித்திர உண்மைகள், தொல்லியல் துறை கண்டுபிடிப்புகள், இலக்கியச் செய்திகள் ஆகியவை ஆங்காங்கே காணப்படலாம். இதற்குமேல், கட்டுரையாசிரியனுடைய அனுமானங்களும் விரவிக் கிடக்கலாம்.

இந்த ஊர்க் காரர்களுக்குத், தங்கள் ஊரின் மீது மிகுந்த பற்று உண்டு. பெருமையுமுண்டு. வேற்றூர்க்காரர்கள், எங்கே தங்கள் ஊரைத் தஞ்சையினும் சிறந்த ஊராகக் கூறிவிடுவார்களோ என்றஞ்சியோ அல்லது தஞ்சையின் பெருமையை நினைத்து இருமாப்புடனோ, தமிழ் இலக்கணத்தில் உள்ள தேற்றேகாரத்தை உபயோகித்து,

தண்ணீருங் காவிரியே

தார் வேந்தன் சோழனே

மண்ணாவதும் சோழ மண்டலமே

என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறி வைத்தார்கள்.

தென்னாட்டவர்களின் ஆதிக்கம் தூரக்கிழக்கு நாடுகள் வரை பரவியிருந்தது தஞ்சையை ஆண்ட ராசராசன், மற்றும் அவன் மகன் ராசேந்திர சோழன் இவர்கள் காலத்திலேதான். அதாவது, தென்னிந்தியா முழுமைக்கும், மற்றும் தூரக்கிழக்கு நாடுகளுக்கும் தஞ்சாவூரே ஒரு வகையில் தலை நகர்.

( இந்த வகையான அரசாங்க அமைப்பு ஐரோப்பியர்கள் காலத்திலும் இருந்தது ஒரு வியப்பான செய்தி. ஆப்பிரிக்காவிலிருந்து தூரக்கிழக்கு நாடுகள் வரை, ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான நாடுகளுக்கு (British East India Company) சென்னை தலை நகராகவும், பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான நாடுகளுக்கு ( French East India Company )புதுச்சேரி தலை நகராகவும், போர்ச்சுக்கீசியர்களுக்குச் சொந்தமான நாடுகளுக்கு ( Portugese East India Company )கோவா தலை நகராகவும் இருந்திருக்கிறது. இது தென்னிந்தியாவுக்குக் கிடைத்த பெருமை. சிங்கப்பூரிலிருக்கும் தாவரவியல் பூங்கா கல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட தாவரவியல் நிபுணரால் ஏற்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் நகரம் முதன்முதலில் தென்னிந்திய தொழிலாளர்கள் மற்றும் அந்தமான் சிறைக் கைதிகளால் உண்டாக்கப்பட்டது. மலேசியாவின் இருப்புப் பாதை கட்டப்பட்டதில் இந்தியத் தமிழர்களுக்குப் பெரும் பங்குண்டு. இலங்கையின் தேயிலைத் தோட்டத் தொழில் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர்கள் தென்னிந்தியத் தமிழர்கள். யாழ்ப்பணத் தமிழர்கள் அன்றைய ஆங்கிலேய அரசுடன் நெருங்கியத் தொடர்புடனிருந்தும் இலங்கை சுதந்திரமடைந்தபோது இந்தத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குடியுரிமை கிடைக்காமல் போனது அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அவமானமும் அவலமுமாகும்.)

தஞ்சாவூர் என்ற பெயரை அடைமொழியாகக் கொண்ட பல பெயர்கள் இன்றும் வழக்கில் இருக்கின்றன. அவை,

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,
தஞ்சாவூர் தட்டு,
தஞ்சாவூர் ஓவியம்,
தஞ்சாவூர் பாணி இசை,
த்ஞ்சாவூர் பாணி நாட்டியம்.
தஞ்சாவூர் கதம்பம்,
தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர்,
தஞ்சை நால்வர் (பொன்னையா சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ),
தஞ்சை கலைக்கூடம்,
தஞ்சாவூர் சரசுவதி மகால், முதலியன.
இவை யாவும் தஞ்சையின் தனிச் சிறப்பை வலியுறுத்துவன.

இவைகளைப்போலவே,

மேற்கத்திய இசைக்கே உரித்தான வயலினைத் தமிழிசைக்கு ஏற்ப மாற்றியமைத்து முதன்முதலில் உபயோகித்தது தஞ்சையில்தான். இதைச் செய்தவர் தஞ்சை நால்வரில் ஒருவரான வடிவேலு. அதற்காக அவருக்கு ஒரு தந்தத்தால் ஆன வயலினைத் திருவாங்கூர் மகாராசா பரிசளித்திருக்கிறார். இப் பரிசு அவருடைய வாரிசுகளில் ஒருவரான சந்திரசேகர நட்டுவனாரிடம் (வீட்டு எண் 1818, மேல ராச வீதி, தஞ்சாவூர்) இன்றும் இருக்கிறது. இந்தக் காரியத்தைச் செய்தது சங்கீத மும்மூர்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் தம்பி பாலுசாமி தீட்சிதர் என ஒரு தவறான செய்தி உலாவி வருகிறது.

தஞ்சை நால்வர் தஞ்சையிலும், திருவனந்தபுரத்திலும் மைசூரிலும் அரசவைப் புலவர்களாக இருந்துள்ளனர்.

கிளாரினட் வாத்தியம் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது ( சிவானந்தம் )தஞ்சையில்தான்.
(வடிவேலுவுடன் திருவனந்தபுரம் சென்ற சுகந்தவல்லி என்ற நடன மாது (முதலியார்)சுவாதித் திருநாள் மஹாராஜாவுடன் நட்பு கொண்டு அவரின் இரண்டாவது மனைவியாக இருந்தார். சபையில் பரதத்தையும், மோஹினியாட்டத்தையும் பிரபலப் படுத்தியவர். ”தஞ்சாவூர் அம்மா வீடு” இன்னமும் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. இவரும் தஞ்சாவூர் ’அம்மாச்சி’யானார். கேரள அரசு சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, இழப்பீட்டுத் தொகை கொடுத்து இந்த வீட்டை எடுத்துக்கொண்டது.) ராஜா மிராசுதார் மருத்துவசாலைக்கருகில், வடமேற்கு மூலையில் இப்போதிருக்கும் (டிம்பர் டெபோ) இடம் மராத்திய மன்னர்கள் சிவானந்தத்திற்குக் கொடுத்த இடம். “நட்டுவன் சாவடி” என்று பெயர். நட்டுவன் என்ற பெயரைத் திருவனந்த புரத்திலும் உபயோகித்தார்கள்.


முதன் முதலில் 'பாண்டு வாத்திய'இசையை அறிமுகப்படுத்தியது தஞ்சைதான்.( ராசா சரபோசி)

'லாவணிக் கச்சேரியை'அறிமுகப்படுத்தியதும் தஞ்சையே.

'ஹரி கதா காலட்சேபம்'அறிமுகமானதும் இங்குதான். (மகாராஷ்டிராவிலிருந்து)

ராசா சரபோசி மேற்கத்திய, சித்த, ஆயுர்வேத, யுனானி வைத்திய முறைகளைக் கலந்து ( Integrated system of medicine) ஒரு புதிய வைத்திய முறையாக 'சரபேந்திரர் வைத்திய முறையை' உருவாக்கி, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலான புலவர்களைக் கொண்டு பாடல்களாக வெளியிட்டு அதனைத் தனது 'தன்வந்திரி'மகாலில் உபயோகப் படுத்தியதும் இங்குதான்.

நாதசுரக்காரர்கள் 'இங்கிலீசு நோட்' வாசிக்க ஆரம்பித்ததும் இங்குதான்.( மதுரை பொன்னுசாமி, சேதுராமன் சகோதரர்களுக்குப் பொற்கிழி வழங்கப்பட்டபோது அவர்கள் பரிசு வழங்கிய மதுரை ஆதீனகர்த்தரிடம், “ ஐயா நோட்டுக்குக் காசாகக் கொடுக்கிறீர்களே ” என்று சிலேடையாகக் கேட்டதாக பேராசிரியர் அ. தட்சினாமூர்த்தி அவர்கள் கூறுவார்கள்.)

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
“திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்”
என்ற கோட்பாடுகளுக்கிணங்க, சங்ககால இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெருந்தொண்டாற்றி வருபவரும், அதனையே தனது

பேராசிரியர் முனைவர் அ. தட்சிணாமூர்த்தி.
வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்பட்டுவருபவருமான தமிழறிஞர், பேராசிரியர்  முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் இம்மண்ணைச் சேர்ந்தவரே.


மிகச்சிறந்த தொல்லியல் துறை அறிஞர், சரித்திர ஆசிரியர்,முனைவர்
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயில் பால சுப்ரமணியன் இம்மண்ணைச் சேர்ந்தவரே.

முதன்முதலில், ஆங்கில ஆட்சியில்,Assistant Commissioner of Police ஆக உயர் பதவியில் அமர்ந்த இந்தியரும், FRHS, MRAS பட்டங்களைப்பெற்றவரும், Tamil Board of Studies at the university of Madras ஆக இருந்தவரும், Sheriff of Madras ( 1924 ) ஆக இருந்தவரும், Bhavanandam Academy for propagation of Tamil ஐ குன்னூரில் அமைத்தவருமான திருவாளர் திவான் பகதூர் சரவண பவாநந்தம் பிள்ளை இவ்வூர்க்காரர்.
திவான்பகதூர் சரவண பவாநந்தம் பிள்ளை - அரசுப்பணியில்.
இவர் ஒரு தமிழ் நாடகாசிரியர். மேலும் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிப் பதிப்பித்து நீலகிரி - குன்னூரில் தொல்காப்பியர்க்குச் சிலையெடுப்பித்து ஒரு நூல் நிலையத்தையும் ஏற்படுத்தியவர்.

மதுரையிலும், கரந்தையிலும் தமிழ்ச் சங்கங்கள் தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்தவரும் திருவாடுதுறை ஆதீனத்தால் புகழப்பட்ட சரசுவதி நூல்நிலையத்தையும், ஒரு மருத்துவ சாலையையும் அரித்துவாரமங்கலத்தில் ஏற்படுத்தியவரும், உ.வே.சாமினாதற்கு புறநானூற்றிற்குக் கிடைக்காத செய்திகளை கொடுத்துதவியவரும்,
கோபலசாமி ரெகுநாத ராஜாளியார்
கள்ளர் இனத்தைக் குற்ற பம்பரையினர் பட்டியலில் இருந்து ஐந்தாம் ஜார்ஜ் அரசரிடம் கூறி நீக்கச் செய்தவரும், அரசஞ்சண்முகனாரையும் நாட்டாரையும் புரந்தவருமான கோபாலசாமி ரெகுநாத ராசாளியார் இவ்வூர்க்காரர்.

தானே முழுதுணர்ந்து தண்டமிழில் பல நூல்களை எழுதியவரும்,

பண்டித,நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவரும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உ.வே.சாவிற்குப்பின்னர் பேராசிரியராகப் பதவி வகித்தவருமாகிய நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இந்த மண்ணின் தவப்புதல்வர்.


நாவலர் நாட்டார் அவர்களின் கனவுகளை நனவாக்குவதையே தனது கடமையாகச் செயல்பட்டு, நாட்டார் திருவருட்கல்லூரியைத் தோற்றுவித்து,

பேராசிரியர் பி. விருத்தாசலனார்.
தாய் மொழியைச் செம்மொழி என அறிவிப்பதற்காக தளராது  உழைத்த பேராசிரியர் பி. விருத்தாசலனார் இம்மண்ணின் மைந்தர்.

சித்த மருத்துவத்துறைக்கு  அளப்பரிய தொண்டு செய்து மருத்துவ கலைச்

டி.வி.சாம்பசிவம் மன்னையார்
சொல் அகராதியை ( கலைக்களஞ்சியம் ) 6000க்கு மேற்பட்ட பக்கங்களில் எழுதி வெளியிட்ட டி.வி.சாம்பசிவ மன்னையார் இவ்வூர்க்காரர். இவரது மனைவியார் துரைக்கண்ணு அம்மாளின் தாய் மாமன் சரவணபவாநந்தம் பிள்ளை.

'கவுத்துவம்' என்ற நடன முறையை அறிமுகப்படுத்தியவர்கள் தஞ்சை நால்வர்.

கேரளக் 'கதக்களியை' பரத நாட்டியத்துடன் கலந்து 'மோகினியாட்டம்' என்ற முறையை அறிமுகப் படுத்தியவர்கள் இந்த நால்வருமே.

உலோகச் சிலைகளை வடிக்க ஆரம்பித்ததும் தஞ்சைத் தரணியே.

தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் இருப்பதும் தஞ்சையிலேதான்.

Scwartz பாதிரியார், தஞ்சையில் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தபோது, இந்தியவிலேயே முதன்முதலாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்பட்டது தஞசை செயிண்ட் பீட்டர் பள்ளியில்தான் என்று கூறப்படுகிறது.

பிலிப்ஸ் என்ற கிழக்கிந்திய கம்பெனியின் ரெசிடெண்ட், மராத்திய ராணி காமாட்சி பாயுடன் சண்டையிட்டு, கருவூலங்களைச் சூறையாடினான்.
சரசுவதி மஹால் நூல் நிலையத்தைக் கொள்ளையடிக்கத்திட்டமிட்டான். நார்டன் என்ற வக்கீல் உதவியுடன் செய்தி இங்கிலாந்திற்குச் சென்றது. ஆங்கில அரசு, கம்பெணி ரெசிடெண்டை நீக்கிவிட்டு தனது நேரடி நிர்வாகத்தில் முதன்முதலாக கலெக்டரை நியமித்தது. கம்பெனியின் கடைசி ரெசிடெண்ட் பிலிப்ஸ்; அரசின் முதல் கலெக்டர் கேடெல்.(கி.பி.1858)
ஆங்கில அரசின் நேரடி நிர்வாகத்திற்கு இந்தியா வந்ததுவும் தஞ்சையினால்தானோ?

( இந்த கேடல், பின்னர் வந்த அர்பத்நாட் இவ்விருவருமே தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டைக் கட்டியவர்கள். இந்த அங்காடி 150 வருடங்களாக நாதியற்றுக் கிடக்கிறது. )



Don Bosco பாதிரியார் முதன்முதலில் தன் கல்விப்பணியைத் தொடர்ந்தது தஞ்சையில்தான். சென்னையில் அல்ல.

Fusion என்றொரு செயல் குறித்து இப்போது பேசப்படுகிறது; மேற்கத்திய இசைக்கருவியைத் தமிழிசைக்கு உபயோகப்படுத்தியும், மேற்கத்திய மருத்துவத்தை தமிழ் மருத்துவத்துடன் இணைத்தும் இந்த Fusion அறிமுகப்படுத்தப்பட்டது தஞ்சாவூரில்தான்.

கோயிலில் ராசகோபுரைத்தைக் காட்டிலும் முழுமுதற்பொருள் உறையும் கருவறை விமானம் உயரமாக முதன்முதலில் கட்டப்பட்டதும் தஞ்சாவூரில்தான்.

ஐந்நூறு ஆண்டுகட்கு முன் மழை நீரை இருமுறை வடிகட்டித் தெளிந்த நீரைச் சுடுமண் குழாய்களின் மூலமாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகர் மத்தியில் இருக்கும் குளங்களுக்கும்,கிணறுகளுக்கும் கொண்டு சென்று குடிநீர்த்திட்டத்தை அமல் படுத்தியதும் தஞ்சையே.

ஐந்நூறு ஆண்டுகட்கு முன் சாக்கடைத் திட்டத்தை, (மழை நீரை அகற்ற) நகரில் அமுல்படுத்தியது இங்குதான். அது இன்றுவரை செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

தக்கையைக்கொண்டும், அதில் சந்தனத்தையும், மிளகு, நெல், கிராம்பு இவற்றை வைத்தும் மாலைகள் செய்யும் கலை பரிணமித்ததும் இவ்வூரிலேயே.

சூரியன் ஒருபோதும் மறையாத சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஆங்கிலேய மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் அரசவையில், ஆங்கிலச் சக்கரவர்த்தியின் "fanatic" என்ற சொல்லின் உச்சரிப்பு சரியல்ல என்று சொல்லி அதைத் திருத்தி உச்சரித்துக் காண்பித்த “silver tongued orator" Rt. Hon. சீநிவாச சாஸ்திரியார், இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்.

Thomas Hardy என்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரசிரியரால் வியந்து பாரட்டப்பட்டு, ராயல் கழகத்தில் (F.R.S.)சேர்த்துக்கொள்ளப்பட்ட உலகம் போற்றிய கணிதமேதை சீநிவாச ராமானுஜன் இம்மண்ணைச் சேர்ந்தவர்.

உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட மர்லோன் ப்ரண்டோவால் ”என்னால் சிவாஜி கனேசனைப்போல் நடிக்க முடியாது” என்று போற்றப்பட்ட செவாலியே சிவாஜி கனேசன் பிறந்தது இம்மண்ணில் தான்.

தான் ஒருவராக, தனிமையில் செயல்பட்டு, ஏழு முறை, தொடர்ந்து
( இரண்டு)அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சையில் நடத்தியவரும், மிகப்பெரும் சித்த வைத்தியரும், மிகப்பெரிய சோதிட சாத்திர வல்லுநரும்,அகில இந்திய அமெச்சூர் புகைப்படக்கலைக் கழகத் தந்தையும்,கிறித்துவ சமயத்தைப்பற்றி ஆராய்ச்சி நூல் எழுதியவரும்,பெரிய வேளாண்விஞ்ஞானியுமாகிய, ”கருணாமிருத சாகரம்“ என்ற இசை நூலை எழுதி, பண்டைய தமிழிசையே இன்றைய கருநாடக சங்கீதம் என்று நிறுவிய தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்தது இம்மண்ணிலேதான்.அவர் தோற்றுவித்ததுதான் தஞாவூர் சங்கீத வித்யா மஹாஜன சங்கம்.

அவரது கருனாமிருத வைத்யசாலையில் செய்யப்பட்ட மருந்துகளை பட்டுவாடா செய்வதற்கெனவே தஞ்சைத் தலைமை அஞ்சலகத்தில் ஒரு தனி கௌண்டரே இருந்திருக்கிறது.

தஞ்சைக்கலைக்கூடத்தைத் தோற்றுவித்தவர், மிகப்பெரிய தமிழறிஞரும், எழுத்தாளரும், சிறந்த கலாரசிகரும், I.A.S அதிகாரியும்,சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளரான தொ.மு.சி.ரகுநாதனின் அண்ணனுமான, திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானாவார். இவரது நூல்கள் 2009ல் நாட்டுடைமையாக்கப்பட்டன.
தொண்டைமான்   மனைவி பாலம்மாவுடன்
இவர் தஞ்சையில் டெபுடி கலெக்டராக இருந்தபோழ்து, தஞ்சையைச்சுற்றிலும் ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் கேட்பாரின்றிக் கிடந்த கற்சிலைகளையும், செப்புப் படிமங்களையும் அவரோடு தாசில்தாராக வேலை பார்த்த திரு ராமச்சந்திர பத்தர் அவர்களின் உதவியுடன், தஞ்சை அரண்மனைக்குக் கொண்டுவந்து இக்கலைக்கூடத்தைப் படைத்தார். இப்படி முதன்முதலில் கொண்டுவரப்பட்ட சிலை பிரம்மா(?)வின் சிலை. " படைப்புக்கடவுளான பிரம்மா, தொண்டைமானுக்குக் கலைக்கூடத்தைப்படைக்க உதவினார் போலும். " என்று தொண்டைமானுடைய நண்பர்கள் கூறுவார்கள். ஆனால், திரு. குடவாயில் பாலசுப்ரமணியன், அச்சிலை வாகீச சிவனாரின் சிலை என்று தனது ’ராசராசேச்சர’த்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொண்டைமானுடைய இலக்கிய அறிவு அவர் ஒவ்வொரு சிலைக்குக் கீழே எழுதி வைத்த குறிப்புக்களிலிருந்து தெரியவரும்.

அவையாவன:

”காதல் தெய்வம் காமனுமே காதலி ரதியுடன் தேரேறி காதலை வளர்க்க விரைகின்றான்; இனி வேதனையுறுபவர் எத்தனையோ”--ரதி மன்மதன் சிலை.

”உலகம் உவப்ப வலனேர்பு திரி தரு பலர் புகழ் ஞாயிறு”--சூரியனார் சிலை.

“பங்கயக் கண்ணன்”--திருமால் சிலை

“மலர்மகள் கொழுநன்”--திருமால் சிலை.

“நீல மேனி நெடியோன்”--திருமால் சிலை.

“வென்றாடு திருத்தாதை வியந்து கை துடி கொட்ட நின்றாடு மழ களிறு”--நர்த்தன விநாயகர் சிலை.

”என்றுமுள தென் தமிழை இயம்பி இசை கொண்டான்.”--அகத்தியர் சிலை.

“தன்னையுந்தாங்கலாதார் துகிலொன்றுந்தாங்கி நின்றார்”- அழகிய நங்கையின் சிலை.
இந்த பாடல்கள் பொறிக்கப்பட்ட பலகைகளை கலைக்கூடத்தினர் எடுத்தெறிந்துவிட்டனர். என்னே மடத்தனம்?


‘சதிர்' என்ற பெயரில், 'தேவதாசிகள்' என்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே ஆடப்பட்டு வந்த நாட்டியத்தை ”பரத நாட்டியம்”என்ற பெயரில் எல்லோரும் ஆட வழிவகுத்தவர்கள் தஞ்சை நால்வரே.
இவர்கள் பரம்பரையில், பின்னர் வந்த பந்தனை நல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் நடனம் பயின்ற திருமதி. ருக்மினி தேவி (சென்னை சங்கீத அகாடமியைத் தோற்றுவித்தவரும் வழக்கறிஞருமான திரு E.கிருஷ்னய்யர் அவர்களின் விருப்பப்படி) தன்னுடைய 'கலா சேத்ராவின்' மூலம் இந்நல்வழியைத் தொடர்ந்தார்.

இப்பெருமை தஞ்சையைச் சாரும்.

தஞ்சாவூரில்
நெல் மாத்திரம் விளைவதில்லை. இவ்வூரில் நெல்லோடு சேர்ந்து, காவிரி நீரின் வளப்பத்தினால், இசையும், நாட்டியமும், ஏனைய நுண் கலைகளும் விளைந்துகொண்டிருக்கிறது காலங் காலமாக. பண்டைய தமிழிசையே இன்றைய கருநாடக சங்கீதம். 'அன்றை நற்றமிழ்க் கூத்து'த்தான் இன்றைய பரத நாட்டியம். சிறந்த இசைப் புலவர்களில் எண்பது விழுக்காடு தஞ்சை மண்ணைச் சார்ந்தவர்களே. நாட்டியத்தில், நூறு விழுக்காடு. நூறு ஆண்டுகளாக பரத நாட்டியத்தைக் காப்பற்றியவர்கள் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களே. ஆயினும் அவர்களுக்கு ஆசானாக அமர்ந்தவர்கள் அனைவருமே இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இது போலவே கருநாடக சங்கீதத்தை சனரஞ்சகமான இசையாகக் காப்பாற்றி வருபவர்கள் பெரும்பாலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே. (தொடர்ந்து தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் மிகுதியாகப் பாடி வருவதும், சரியான தமிழ் உச்சரிப்பு இல்லாமல் பாடுவதும் இவர்களிடமுள்ள குறை.) ஆயினும், தமிழிசை தொடர்பறுந்து போகாமல் பாடி வருபவர்கள் கோயில்களில் பாடி வரும் ஓதுவார்களும், இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த நாதசுரக்காரர்களுமே. சங்க இலக்கியத்தில் கூறப்படும் பாணர்களும் விறலியர்களும் இந்த இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானோ?

இசை வேளாளர் குடும்பங்கள் மிகுதியாகக் காணப்படுவது தஞ்சை மண்ணில் தான்.

தஞ்சாவூருக்குப் பெருமை சேர்க்கும் இந்து கோயிலாகிய பெரிய கோயிலைப் போலவே இம்மண்ணிற்குப் பெருமை சேர்ப்பவை இஸ்லாமிய நாகூர் தர்காவும், கிறித்தவ வேளாங்கண்ணி மாதா கோயிலுமாகும்.

நவ கிரகங்களுக்குக் கோயில்கள் இருப்பதும் இம்மண்ணில் தான்.

சரஸ்வதிக்குக் கோயில் இருப்பது இம்மண்ணில்தான்.

காற்பந்தாட்டத்தில் இரு ஒலிம்பிக் (Olympians) வீரர்களைக் கொண்டது தஞ்சாவூர். அவர்கள் கேப்டன். கிருஷ்ணசாமி ( கிட்டு )யும், வீரர் சைமன் சுந்தர ராசனு (எனது பள்ளித் தோழர் )மாவர். இவர்கள் கலியாண சுந்தரம் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

கிட்டுவைப் பற்றி தமிழாசிரியர் சேஷாத்திரி சர்மா இயற்றிய பாடல்:-

வேகமிக யூகமிக .................க
மாகாற்பந்தாட வலனெனவே -வாகை பெறு
நம் கிட்டுவைக் கிட்ட இங்கிட்டு மங்கிட்டு
மெங் கிட்டு மில்லை யெவரும்.
(இப்பாடலில் எனது குறைபட்ட நினைவாற்றலால் தவறுகள் உள்ளன)

தஞ்சாவூர் மாவட்ட வாரியம், முதன்முதலில் இருப்புப் பாதை போட்டது இந்த மண்ணில்தான். இது மயிலாடுதுறையிலிருந்து முத்துப்பேட்டைக்குப் போடப்பட்டது ( கி.பி.1878ல் )

ஆங்கில ஆட்சியில், ஒரு மாவட்ட வாரியம் ( District Board ) தன்னுடைய வருமானத்திலிருந்து ஒரு இருப்புப் பாதை போக்குவரத்தை நடத்தியது தஞ்சாவூரில்தான். இந்த செயலை முன்னோடியாக எடுத்துக்கொண்டு இந்தியாவின் எல்லா மாவட்டங்களும் பின்பற்ற வேண்டுமென்று ஆங்கில அரசு ஆணையிட்டது.

The great southern of India Railway முதன்முதலில் போட்ட இருப்புப் பாதை தஞ்சாவூருக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலேதான். (கி.பி.1861ல்)

ஜமீந்தார்களும், குறுநில மன்னர்களும் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், எந்த பெருநிலக்கிழாருக்கும் விலைபோகாமல் தன்னை என்றுமே நாதசுரச் சக்கரவர்த்தி என்றே அழைத்துக்கொண்ட திருவாவடுதுறை வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமான பிரிட்டீஷ் அரச சபையில் எலிசபெத் அரசியின் முடிசூட்டும் விழாவில் நாதசுரம் வாசித்துத் தன்னை சக்கரவர்த்தி என்று நிரூபித்தவர். அவர் இந்த மண்ணின் மைந்தன்.

ஏழிசை மன்னர் தியாகரஜ பாகவதர் மயிலாடுதுறைக்காரர்.

மதுரை சோமு என்றழைக்கப்பட்டாலும் அவர் தஞ்சவூர்க்காரரே.

இசையரசு தண்டபாணி தேசிகர் திருச்செங்காட்டங்குடிக்காரர்.

ருக்மினிதேவி அருண்டேல் திருவையாற்றுக்காரர்.



இந்த மண்ணின் பெருமையால் ஈர்க்கப்பட்டு, வேறொரு மாநிலத்திலிருந்து வந்து நாதசுரத்தைக் கற்றுக்கொண்டு தமிழ் மண்ணில் வித்வானாகத் தடம் பதித்தவர் தெலுங்கரான ஷேக் சின்ன மவுலானா.

இது போலவே, ஜான் ஹிக்கின்ஸ் என்ற அமெரிக்கர், இந்த மண்ணில் வளர்ந்த கருநாடக இசையை இங்கு வந்து கற்று “ கா வா வா. கந்தா வா வா” என்று பாடிப் புகழ் பெற்று ஜான் ஹிக்கின்ஸ் பாகவதர் ஆனார்..



தஞ்சை நகரம்.

ஏறக்குறைய, கி,பி,1218 முதல் கி.பி.1535 வரையிலான, முந்நூறு (317) ஆண்டுகட்கு தஞ்சை என்ற ஊரே கிடையாது என்ற சரித்திரச் செய்தி பலருக்குத் தெரியாதிருக்கலாம்.

சோழ சாம்ராஜ்யம் வலுவிழந்த போது, பாண்டிய மன்னன் தஞ்சாவூரின் மீது படையெடுத்து, நகரை அழித்து, எரித்து, அதன் சாம்பலை நகர் முழுதும் தூவி கழுதையைக் கொண்டு உழுது, வரகைத் தெளித்துத் தரை மட்டமாக்கித் தன் வஞ்சினத்தைத் தீர்த்துக்கொண்டான். பெரிய கோயிலை மாத்திரம் அழிக்காமல் விட்டுவிட்டான்,

நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ( 1343 ல்), பாண்டிய மன்னர்களின் பிரதிநிதியாகிய சாமந்த நாராயணத் தொண்டைமான் என்பவன், சாமந்த நாராயணச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரையும் ( இன்றைய கொண்டிராஜ பாளையம்), சாமந்த நாராயண விண்ணகரம் என்ற யோக நரசிம்மப் பெருமாள் கோயிலையும், சாமந்த நாராயணன் குளம்(சாமந்தாங்குளம்) என்ற குளத்தையும் வெட்டி தஞ்சாவூரை மறுபடியும் ஏற்படுத்தினான். ( குடவாயில் பால சுப்ரமணியன்)

பின்னர் வந்த செவ்வப்ப நாயக்கன், அவன் மகன் அச்சுதப்ப நாயக்கன் ஆகிய இருவரும் தஞ்சை அரண்மனையையும், நகரையும், கோட்டைச் சுவர்களையும், அகழியையும் அமைத்து இன்றைய தஞ்சையை அமைத்தார்கள்.

நகரக் கோட்டையையும், ராசராசேசுரத்தைச் சுற்றிய கோட்டையையும் இணைத்துப் பார்த்தால், இக்கோட்டை ஒரு கருடனைப்போல் தோற்றமளிக் குமாதலால், இக்கோட்டைக்குக் கருடக் கோட்டை என்னும் பெயர் உண்டென்றும்,ஆதலால்,கருடக்கோட்டைக்குள்ளிருப்பவர்களைப் பாம்பு தீண்டினால், விடம் ஏறாது என்றும், ஒரு பாடலைப்பாடினால், விடம் இறங்கி விடும் என்றும் ஐதீகம் உண்டு. (எனது தமிழாசிரியர் கற்பித்த அப்பாடலை நான் மறந்துவிட்டேன்.)

கீழவாசலும் வடக்குவாசலும்.

தஞ்சைக்கு மேற்கேயும், தெற்கேயும் 'மானம்பார்த்த' பூமியாதலால், விளை நிலங்கள் அங்கில்லை. அவை வடக்கேயும் கிழக்கேயுந்தான் உள்ளன. ஆகவே, அரண்மனைக்கும் வெளியுலகிற்கும் இருந்த தொடர்பு (பெரும்பாலும்) தஞாவூருக்குக் கிழக்கேயும் வடக்கேயும் உள்ள பகுதிகளுடன்தான்.விவசாயப்பொருள்கள் யாவும் நகருக்குக் கிழக்கேயிருந்தும் வடக்கே யிருந்தும்தான் வரவேண்டும். தவிர கீழவாசல், வடக்குவாசல் என்ற இரு புற நகர்ப் பகுதிகள் இன்றும் உள்ளன. கீழ வீதியிலிருந்து நேர் கிழக்கே நாகப்பட்டிணம் வரை ஒரு பெரு வழியும், வடக்கு வீதியிலிருந்து நேர் வடக்கே திருவையாறு, குடந்தை வழியாக ஒரு பெரு வழியும் ( கோடி வனமுடையாள் பெரு வழி-பண்டைக்காலப்பெயர் ) இருக்கிறது. ஒவ்வொரு புறநகர்ப் பகுதியிலும் ஒரு காய் கறி 'மார்க்கெட்'டும் ஒரு நெல்லுமண்டித் தெருவும் இன்றும் இருக்கின்றன. கீழவாசலில் ஒரு பெரிய அரிசிக்காரத்தெருவும் ஒரு சின்ன அரிசிக்காரத்தெருவும் உள்ளன. வடக்கு வாசலிலும் அரிசிக்காரத்தெரு உண்டு. மேலும், நெல்லிலிருந்து அரிசியெடுக்கும் இயந்திரங்கள் கீழவாசலிலும் கரந்தையிலுந்தான் இருக்கினறன.
எனவே கோட்டைக்கு வடக்கு வாசலும், கீழவாசலும் மட்டுமே பிரதான வாசல்களாக உள்ளன. மேற்கிலும், தெற்கிலும் அப்படியேதும் சிறப்பான அமைப்புக்களில்லை.

நெல்லை சேமித்து வைக்க மிகப்பெரிய களஞ்சியம் ஒன்று மேல வீதியில், கலியான சுந்தரம் உயர் நிலைப் பள்ளியின் விளையாட்டுத்திடலினுள்ளே - களஞ்சியம் சந்தில்- இன்றும் இருக்கிறது. (Interesting enough to the department of civil supplies ) இவ்வளவு பெரிய களஞ்சியம் இருப்பது தஞ்சையில்தான்.


தஞ்சை அரண்மனைக்கென ஒரு மதில் சுவரும், சுவற்றுக்கு வெளியே குடியிருப்புக்களையும், அரண்மனையையும் உள்ளடக்கி ஒரு கோட்டை சுவரும், உள்ளன. இதனைப் போன்றே, ராசராசேச்சுரத்தைச் சுற்றி ஒரு மதில் சுவரும், கோயிலையும் குளத்தையும், பூங்காவையும் உள்ளடக்கி ஒரு கோட்டை சுவரும், உள்ளன. இவ்விரு கோட்டை சுவர்களையும் உள்ளடக்கியது நீர் அரணாகிய அகழி. எனவே, அகழி ஒரு பெரு வட்டம். அதனுள்ளே இரு சிறு வட்டங்கள். ஒரு சிறு வட்டம் இத்தரணி முழுமைக்கும் நாயகனாகிய 'கோ'வின் இல்லை உள்ளடக்கியது. அடுத்த சிறு வட்டம் தஞ்சைத் தரணிக்குக் 'கோ'வாகிய நாய(க்)கனுக்கான இல் ஐ உள்ளடக்கியது.. ( Civil Engineers, Architects and Town planners to note). இப்படியொரு அமைப்பு வேறெங்கும் இல்லை.

வல்லத்திலிருந்து தெற்கு நோக்கிச் சென்றிருக்க வேண்டிய புதாற்றை வேண்டுமென்றே வடக்கே திருப்பி, ராஜராசேச்வரத்தின் தெற்குப் பக்க அகழி வழியாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். ( தலைமைப் பொறியாளர் திரு. நரசிம்ம ஐய்யங்கார் அவர்கள் ) இதனால், கோயில் ஆற்றின் கரையில் அழகாக அமைந்துவிட்டது. ஆற்றின் கரையில் கோயில் கட்டுவது வழக்கம். ஆயிரம் வருடங்களுக்குப்பின், முன்னரே கட்டப்பட்ட கோயிலுக்கருகே ஆறு வெட்டுவது தஞ்சையில் மாத்திரமே நடக்கக்கூடிய அதிசயம். ராசராசேச்சுரதின் மேன்மை அப்படி.

தஞ்சை அரண்மனையும், கீழவாசல், மற்றும் வடக்குவாசல் புறநகர்ப் பகுதிகளும் கொண்டது பழைய தஞ்சை. பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை ஆங்கிலேயர் காலத் தஞ்சை. வ.உ.சி. நகருக்குத் தெற்கே இருப்பதும், கோயிலுக்கு மேற்கே இருப்பதும் புதிய தஞ்சை.

கோட்டைக்குள்ளே மந்திரிப் பிரதானியருக்கான உதவியாளர்களும், வடக்குவாசல் கீழவாசல் முதலான இடங்களில் எல்லோருக்குமான வேலையாட்களும் வசித்து வந்திருக்க வேண்டும். (ஐயங்கடைத்தெருவும், காசுக்கடைத்தெருவும் வணிக வளாகமாக இருந்திருத்தல் வேண்டும். ) கீழவாசலில் இருக்கும் தெருக்களின் பெயர்களைப் பார்த்தால், இது விளங்கும். அப்பெயர்கள்:-

துரோபதையம்மன் கோயில் தெரு, வைக்கோல் காரத் தெரு, வார்காரத் தெரு, ஒட்டக்காரத் தெரு, கயிற்றுக்காரத் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, நெல்லுமண்டித்தெரு, அரிசிக்காரத்தெரு, ஆட்டுமந்தைத்தெரு, பாம்பாட்டித்தெரு, குறும்பர் தெரு, சைவாள் தெரு,பில்லுக்காரத் தெரு
குயவர் தெரு, யாதவர் தெரு, கொள்ளுப் பேட்டைத் தெரு, பட்டு நூல்காரத் தெரு, கீரைக்காரத்தெரு,வண்டிக்காரத் தெரு, பூக்காரத்தெரு முதலியன.

ஒட்டக்காரத்தெருஎன்பது ஓடக்காரத்தெரு என்றிருந்திருக்கலாம். ஏனெனில், இத்தெரு வடவாற்றின் தென் கரையில் உள்ளது; மேலும் இத்தெரு கயற்றுக்காரத்தெரு, வார்க்காரத்தெரு இவற்றின் பக்கத்துத்தெரு. ஆகவே இத்தெரு தஞ்சையிலிருந்து கரந்தை செல்லுபவர்களுக்குச் சாதகமாக ஓடம் செலுத்தியவர்கள் வாழ்ந்த தெருவாக இருந்திருக்கலாம். ஓடம் கட்டுபவர்களுக்குத் தேவையான கயிறு மற்றும் வார்கள் பக்கத்துத் தெருக்களில் செய்யப்பட்டிருக்கலாம். கும்பகோணத்திலும், மதுரையிலும் “ஓடம்போக்கி” என்ற பெயர் இருப்பது கவனத்திற்குரியது.

வடவாற்றின் தென் கரையில் மேற்கே இருந்து கிழக்குக் கோடி வரை சோலைகளும் நந்தவனங்களுமாக இருந்திருக்க வேண்டும். இக்கருத்துக்கு சாதகமான பெயர்களாக இருப்பவை:

வம்புலாஞ்சோலை,பாலோபாநந்தவனம், அம்மாத்தோட்டம், சர்க்கிள் தோட்டம், அரண்மனைத்தோட்டம், பாப்பாத்தியம்மாள் தோட்டம் என்ற பெயர்களாகும். அரண்மனைத் தோட்டம் கயற்றுக்காரத் தெருவிலிருந்து சுண்ணாம்புக்காரத்தெரு வரையிலும்; ஓடக்காரத்தெருவிலிருந்து டபீர் குளம் ரோடு வரை இருந்தது. நாற்பது அடி விட்டம் கொண்ட கிணறு இத்தோட்டத்தில் இருந்தது. 1970 வரை இந்தத்தோட்டம் முழுமையிலும் மல்லிகை விளைந்தது. இந்தத் தோட்டம் இலங்கையில் அமைச்சராக இருந்த திரு. நடேசப் பிள்ளை என்பவரின் சொத்தாக இருந்து பின்னர் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் நகரத்தின் கீழ்க்கோடியில், வடவாற்றின் தென் கரையிலிருந்து பெரிய சாலைத்தெரு அல்லது ராமேச்வரம் சாலை வழியே அரிசிக்காரத்தெருவிற்குப் போகும் வழியில் வெள்ளைக்காரன் குளமும், டபீர் குளமும் இருந்தன. அரண்மனையோடு தொடர்புடைய டபீர் பண்டிதரின் பெயரைக் ( குடவாயில் பாலசுப்ரமணியன் ) கொண்டதாக டபீர் குளம் இருந்திருக்கலாம். டபீர் குளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்ப்பட்டுவிட்டன. இதைப்போலவே ஹரி என்ற பண்டிதரின் பெயரைக்கொண்ட ஹரிபண்டிதர் குளமும் காணாமல் போய்விட்டது,
கரையோரத்தில் இருந்த உப்பரிகை பங்களாவைக் கொண்டு நோக்கும்போது வெள்ளைக்காரன் குளம் காற்று வாங்கப்போகும் இடமாக இருந்திருக்கலாம். . வெள்ளைக்காரன் குளம் ஒரு சிறிய குட்டையாக மாறியுள்ளது.

டபீர் குளத்தைப்போலவே மராத்திய மன்னர்களின் சேனையிலிருந்த மானோஜியின் பெயரைக்கொண்டிருப்பது, கோட்டைக்கு மேற்கேயுள்ள மானோஜிப்பட்டி (மானோஜிப் பட்டியில் இன்றும் ஒரு உப்பரிகை மாளிகை இருக்கிறது )யும், மானோஜியப்பா வீதியும்.

மராத்தியர்கள் தமிழகத்திற்கு வந்து இங்கேயே தங்கி வாழ ஆரம்பித்தவுடன் மராத்திய வார்த்தைகளுடன் தமிழ் வார்த்தைகள் ஒட்டிக்கொண்டன.

உதாரணமாக,

மாமா சாகேப் மூலை; அப்ஜண்ணா வட்டாரம்; ராணியக்கா சந்து; மேஹ்தே ராவ் அப்பாசாவடி (மோத்தரப்பா சாவடி) ,மானோஜியப்பா சந்து முதலியன.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டும் விழா ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டது, தஞ்சை மணிக்கூண்டும் அதன் பக்கத்திலேயிருந்த வளைவும். இது போலவே, புதாற்றுப் பாலத்தினருகில், கோர்ட் சாலை ஆரம்பத்தில் ஒரு war memorial இருந்தது. இதில் முதல் உலக மகா யுத்தத்தில் இறந்த தஞ்சை வீரர்களின்
பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தஞ்சைக்கோட்டையின் கீழவாசல் 1960-70 வரை சிதையாமல் இருந்தது. பெரிய லாரி நுழைந்து போகுமளவுக்கு அகலமாகவும், இரு பக்கங்களிலும் நான்கு நான்கு அறைகளைக்கொண்டதாகவும் இருந்தது. ஒவ்வொவ்வொரு அறையிலும் ஒரு யாணையைக்கட்டலாம்.

இந்த மணிக்கூண்டுவளைவும், war memorial ம், கீழவாசலும் முன் யோசனையின்றி மூர்க்கத்தனமாக இடிக்கப்பட்டன.

தஞ்சைக்குப் பெருமை சேர்த்த குடும்பங்களில் மிக முக்கியமான குடும்பங்கள் இரண்டு. ஒன்று, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் குடும்பம். மற்றொன்று யாகப்ப நாடார் குடும்பம்.
ஆபிரகாம் பண்டிதர் தஞ்சைக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளவிடர்க்கரியது. அவர் ஆறு முறை அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சையில் கூட்டியிருக்கிறார். அவர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் இசையாராய்ச்சி நூல் காலா காலத்திர்க்கும் தமிழனுக்குப் பெருமை சேர்ப்பது. கருணாநிதி வைத்திய சாலையில் வழங்கப்பட்ட மருந்துகளை பட்டுவாடா செய்வதர்க்காகவே தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையத்தில் ஒரு தனி அலுவலரும் அலுவலகமும் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. சூடான பிரதேசத்தில் விளையாத பயிர்களையும் அவரது தோட்டத்தில் விளைவித்த பாங்கினை ஆங்கிலேய கவர்னர்கள் மிகப் பாராட்டி எழுதி வைத்திருக்கிறார்கள். அவர் சோதிடத்திலும் வல்லவர். எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களை பன்னிரண்டு ராசிச் சக்கரத்தோடு இணைத்து ஆய்வு செய்திருக்கிறார். காற்றாலையைக் கொண்டு தஞ்சையில் முதன்முதலில் தண்ணீர் இறைத்து பயிர் செய்தது இவரே. தஞ்சையில் முதன்முதலில் அச்சியந்திர சாலை நிறுவியவர் இவரே ( லாலி அச்சியந்திர சாலை).
யாகப்ப நாடார் அவர்களது புத்திரராகிய திரு. அருளானந்த நாடார் ”முத்தமிழ் வள்ளல்” எனப் பெயர் பெற்றவர். அவரது தம்பி பரிசுத்த நாடாரும் அவ்வாறே. பரிசுத்த நாடார் கொடுத்த நிலத்தில்தான் தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் டயோசீஸ் ஆரம்பிக்கப்பட்டது. அவர் ரோடரி சங்கத்தில் இருந்த போதுதான் ராஜா சரபோஜி கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. பொது மக்கள் குளிக்கவும் குடிக்கவும் தண்ணீ்ர்ப் பந்தல்களும் தொட்டிகளும் நகரின் பல பகுதிகளில் கட்டப்பட்டன.

பார்னெல் என்ற ஆங்கில எழுத்தாளரது ஹெர்மிட் என்ற கவிதையை சி.ராமச்சந்திர அய்யர் என்ற வழக்கறிஞர் 1904ல் வெளியிடப்பட்டிருக்கிறார். இது தஞ்சையில் இருந்த கலியாணசுந்தரம் முத்திரா சாலையில் அச்சிடப்பட்டு ஜி. எஸ். மணியா அண்ட் கோ என்ற வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டிருக்கிறது. வியப்பூட்டும் செய்தி.




தயவு செய்து கீழ்க்கண்ட வலை தளத்திற்குச் செல்லவும்

www.thamizharnagarigam.com